மரணமடைந்தவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் செய்ய வேண்டியவை
17. நோயினால் பீடிக்கப்பட்டவர் மரணமடைந்து விட்டால் பக்கத்திலிருப்பவர்கள் செய்ய வேண்டிய பல வேலைகள் உள்ளன.
(அ) என் கணவர் அபூஸலமா மரணமடைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது என் கணவரின் கண் திறந்திருந்தது. நபியவர்கள் இலேசாகக் கசக்கிக் கண்ணை மூடிவிட்டு 'உயிர் கைப்பற்றப் பட்டவுடன் (பிரிந்தவுடன்) பார்வை அதனை நோக்கியே இருக்கும்' எனக் கூறினார்கள். இதனைக் கேட்டவர்கள் அனைவரும் நடுக்கமுற்று அழுதார்கள். 'நீங்கள் உங்களைப் பற்றி நன்மையான சொல்லையே உபயோகித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுபவற்றுக்கு வானவர்கள் ஆமீன் கூறுகிறார்கள்' எனக் கூறிவிட்டுப் பின்
"யா அல்லாஹ்! அபூஸலமாவுக்குப் பிழை பொறுப்பாயாக! நேர்வழியடைந்தவர்களில் அவர் பதவியை உயர்த்துவாயாக! அவர் தமக்குப் பின் விட்டுச் செல்லும் மக்களுக்கு நீயே பிரதிநிதியாக இருந்து காப்பாற்றுவாயாக! எல்லா உலகங்களினதும் அதிபதியே! எங்களுக்கும், அவருக்கும் பிழை பொறுப்பாயாக! அவரின் மண்ணறையை விசாலப்படுத்தி வைப்பாயாக! அதிலே ஒளியையும் ஏற்படுத்துவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள்.
(முஸ்லிம், அஹ்மத்)
(ஆ) மரணித்தவரின் உடம்பு முழுவதும் மறையக் கூடியதாகத் துணியினால் மூடி வைக்க வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மரணித்த (வபாத்தான)வுடன் “ஹிப்ராப்" போர்வையினால் (உடம்பு முழுவதும் மறையக்கூடியவாறு) போர்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி, முஸ்லிம், பைஹகி)
(இ) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவராக மரணித்தவருக்கு இவ்வாறு போர்த்தக் கூடாது. இஹ்ராம் கட்டிய பின் மரணித்தவரின் முகத்தையும் தலையையும் மூடக் கூடாது. நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற ஒருவர் அரஃபா மைதானத்தில் வாகனத்திலிருக்கும்போது விழுந்து கழுத்து முறிந்து மரணித்து விட்டார். "அவரைத் தண்ணீர், இலந்தை இலை ஆகியவற்றால் குளிப்பாட்டுங்கள். இரண்டு துணியில் (அவருடைய இரண்டு துணியாலும்) கபனிடுங்கள். வாசனைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். அவரின் தலையையும், முகத்தையும் மூடாதீர்கள். ஏனெனில் அவர் 'தல்பியா'க் கூறியவராகவே, மறுமையில் எழுப்பப்படுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
(ஈ) மரணித்தவரை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது. விரைந்து செய்ய வேண்டும். ஏனெனில் "மையித்தை அடக்கம் செய்வதற்கு அவசரப் படுத்துங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
(உ) ஒருவர் மரணித்த ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். வேறோர் இடத்திற்கு மாற்றக் கூடாது. அவ்வாறு செய்வது அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தும். இது முன் கூறப்பட்ட நபிமொழியை அலட்சியப்படுத்துவதாகக் கருதப்படும்.
இதற்காகவே அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் சகோதரர் "வாதில் ஹபஷா" என்ற இடத்தில் மரணமடைந்ததும் அவரை அங்கிருந்து மதீனா கொண்டு வந்தார்கள். “எங்களைத் துக்கமடையச் செய்யவே இவ்வாறு நடந்து கொண்டீர்கள். அவர் மரணித்த இடத்திலேயே அடக்கம் செய்யப்படுவதை விரும்பினேன்" என அன்னையவர்கள் கூறினார்கள்.
(பைஹகி),
தான் இறந்து விட்டால் தன்னை இன்ன இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டுமென்று ஒருவர் வஸிய்யத் செய்துவிட்டு இறந்தால் அந்த வஸிய்யத்தை நிறைவேற்றக் கூடாது. ஏனெனில், ஒரு மையித்தை இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்வது ஹராமாகும் என அதிகமான மார்க்க அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்று இமாம் நவவீ அவர்கள் தமது "அல்அத்கார்” எனும் ஏட்டில் கூறியுள்ளார்கள்.
(ஊ) மரணித்தவர் பிறருக்கு ஏதேனும் கடன் கொடுக்க வேண்டியது இருந்தால் அதனைக் கொடுத்து விட வேண்டும். அவரிடம் கடனைக் கொடுக்க ஏதுமில்லாவிடில் ஆட்சியாளர் அக்கடனை நிறைவேற்ற வேண்டும்.
கடன் கொடுத்தவர்கள் கடனை மன்னித்து விடுவது கூடும். அல்லது அக்கடனுக்கு மரணித்தவரின் சொந்தக் காரர் யாராவது பொறுப்பேற்றுக்கொள்ளுவதும் சிறந்த தாகும் (எவ்வாறாயினும் அவர் கடனாளியாக இருக்கும் நிலையில் அடக்கம் செய்வது விரும்பத்தக்கதல்ல).
In Sha Allah will be continued
Comments
Post a Comment
welcome to your comment!